இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நவீன ஏமாற்று வேலை !


ஆயுள் காப்பீடு செய்யப் போகிறீர்களா? ஏற்கனவே செய்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள், இல்லையென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை ஏமாற்றக் கூடும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கும் உகன் பஸ்வானுக்கும் இடையிலான இந்த வழக்கை படித்துப் பாருங்கள், ஆட்டோ கவர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

ராம்பிரீத் பஸ்வான் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் மூலம் “சூப்பர் கேஷ் கெய்ன் இன்சூரன்ஸ்” பாலிசியை வாங்கினார். இந்தப் பாலிசி அக்டோபர் 13, 2012 முதல் அக்டோபர் 12, 2028 வரையிலான காலத்திற்கு ரூ.4 லட்சம் உறுதி செய்யப்பட்ட பாலிசியாகும். ஆண்டு பிரீமியம் ரூ.46,176. துரதிஷ்ட வசமாக ராம்பிரீத் ஜனவரி 22,2015 அன்று மாரடைப்பால் காலமானார், அவரது மகன் உகன் பஸ்வான் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒரு கிளைம் பதிவு செய்தார்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக உங்கள் தந்தையார் பிரீமியம் செலுத்தாததால் பாலிசி காலாவதியாகி விட்டது என்று மார்ச் 31, 2015 அன்று காப்பீட்டு நிறுவனம் பஸ்வானின் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. உகன் மாவட்ட மன்றத்தில் புகார் அளித்தார். தனது தந்தை ஆண்டுதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாக தவறாமல் பிரீமியம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார், அவரது தந்தை நான்காவது ஆண்டு பிரீமியம் செலுத்த முயன்றபோது, பலமுறை முயன்றும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் எழுத்துப்பூர்வமான விளக்கத்தைக் கோரிய போது, காப்பீட்டு நிறுவனம், உங்கள் பாலிசி செல்லுபடியாகும் என்றும் பிரீமியம் செலுத்தத் தேவையில்லை என்றும் பதிலளித்தது. இப்போது பிரீமியம் செலுத்தாததால் பாலிசி காலாவதியாகிவிட்டது என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் எப்படி தனது உரிமைகோரலை நிராகரிக்க முடியும் என்று உகன் பஸ்வான் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இந்த வழக்கை பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை, பலமுறை மாவட்ட ஆணையம் நோட்டீஸ் அனுப்பியும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் ஆஜராகவில்லை, ஆகவே மனுதாரருக்கு ஆதரவாக ஆணையம் ப்ரீமியம் செலுத்தப்பட்டதாகக் கணக்கில் கொண்டு கிளைம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக 4 லட்சம் காப்பீட்டுத் தொகையும், 10 % வட்டியும், கூடுதலாக மனுதாரரின் மன உளைச்சலுக்கு 15,000, அபராதம் 15,000, வழக்குச் செலவுக்கு 5,000 மற்றும் இதர செலவுகளுக்கு 2,000 ரூபாய் சேர்த்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் வட்டி விகிதம் 12 % ஆக உயர்த்தப்படும் என்றும் மாவட்ட ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

பஜாஜ் அலையன்ஸ் பிஹார் மாநில ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது, மாநில ஆணையம் மேல்முறையீட்டுக்கான முகாந்திரங்கள் ஏதும் இல்லை என்றும், இது தவறான மேல்முறையீடு என்றும் வழக்கைத் தள்ளுபடி செய்தது, பஜாஜ் அலையன்ஸ், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே ஆண்டு ப்ரீமியம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், மூன்றாம் ஆண்டு ப்ரீமியம் நிலுவைக்கான (அக்டோபர் 13,2014) காசோலை மனுதாரர் கணக்கில் போதுமான பணம் இல்லாததால் திரும்பி விட்டதாகவும், பாலிசி காலாவதியானதும் வழங்கப்பட்ட கூடுதல் காலத்திலும் மனுதாரர் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்றும் தேசிய ஆணையத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. பாலிசி விதிமுறைகள் முறையாக விளக்கப்படவில்லை என்று நிறுவனம் வாதிட்டது. “பாலிசி காலாவதியாகும் பட்சத்தில் செலுத்தப்பட்ட பிரீமியம் எந்த நன்மைகளும் இல்லாமல் இழக்கப்படும்” என்ற நிறுவனத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அது பிரிவு 5 ஐ நம்பியிருந்தது.

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் மறு ஆய்வு வாத்தை தேசிய ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை, ஒருவேளை ப்ரீமியம் செலுத்தப்படவில்லையென்றால் கூட ப்ரீமியம் செலுத்தப்படாத நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு “ஆட்டோகவர்” இருப்பதையும், பாலிசி அக்டோபர் 13, 2012 இல் எடுக்கப்பட்டிருப்பதால் ஆட்டோ கவர் 2015 அக்டோபர் 12 வரை செல்லுபடியாகும் என்பதையும் ஆணையம் சுட்டிக்காட்டியது. பாலிசிதாரர் ஜனவரி 12, 2015 இல் அதாவது ஆட்டோகவர் இருக்கும் கால வரம்பிற்குள் இறந்ததால் இந்தக் கிளைம் மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பஜாஜ் அலையன்ஸ் தீர்ப்பில் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இது போல எத்தனையோ நுட்பமான காரணிகளால் மிகப்பெரிய அளவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர்களை ஏமாற்றி வருவதும், இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததால் பலர் மிகப்பெரிய காப்பீட்டுத் தொகையை இழந்து வருவதையும் நம்மால் பார்க்க முடியும். உங்கள் காப்பீடுகளைக் குறித்து அறிந்து கொள்ளவும், உங்கள் புதிய காப்பீடுகளைப் பெறவும் நாங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறோம்,

இன்சூரன்ஸ் குறித்த உங்கள் கேள்விகளுக்கும், புதிய பாலிசி எடுப்பதற்கும்

தொடர்பு கொள்ளுங்கள் – நர்மதா – 9150059377


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *