அமெரிக்க டாலரும் இந்திய பொருளாதாரமும்


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு என்பது முன் எப்போது இல்லாத அளவிலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 80 ரூபாய் என்ற அளவில் இந்த ஆண்டு இறுதியில் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றன. தற்போதைய நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 77 ரூபாய் 98 காசுகள் என்ற நிலையில் இருக்கிறது. இருப்பினும், இது மேலும் 2 ரூபாய் அளவிற்கு சரிய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சரிவதற்கான காரணங்கள் என்னென்ன? ரூபாய் மதிப்பு சரிவதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வர மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்திய சந்தைகளை விட்டு அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது மற்றும் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது என சில முக்கிய காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

மற்ற பொருளாதார காரணங்கள்..

டாலருக்ரு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மேலே சொல்லப்பட்டு உள்ள, சில அடிப்படை காரணங்களால் தினமும் மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், அவ்வப்போது நடக்கும் சில முக்கிய மாற்றங்களும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. டிசம்பர் 2021ம் ஆண்டு வரை கொரொனா மற்றும் அதன் திரிபான ஒமைக்ரான் தான் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், நிலைமை சற்று சரியாக தொடங்கியது, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டதால் ஏற்பட்ட பாதிப்பில் கரண்சிக்களின் மதிப்பு சிக்கி கொண்டது. தற்போதைய நிலை அப்படியே நீடித்தாலும், ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் வரை சரிவும் என்றும், புதிய சிக்கல்கள் உருவாகும் நிலை ஏற்பட்டால், அதன் மதிப்பு மேலும் சரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

டாலரும், விலைவாசியும் …..

ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், 2022-23ம் நிதியாண்டில் ரூபாயின் மதிப்பு 76 ரூபாயாக இருக்கும் என்று கணித்து இருந்தது. ஒரு வேளை, இந்த நிலையில் இருந்து, ரூபாயின் மதிப்பு 5 சதவிதம் சரிந்தால், இது பணவீக்கத்தில் 0.20 சதவிதம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. அதாவது விலைவாசி அதிகரிக்கும் என புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே விலைவாசி அதிகரித்துள்ளதை சாமானிய மக்களால் உணர முடிகிறது என்ற நிலையில், தற்போதைய நிலையில் ரூபாயின் மதிப்பு 2 சதவிதம் வரை (ரிசர்வ் வங்கி சொன்ன 5%ல்) சரிந்துள்ளது. இது விலைவாசியை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தொழில்களுக்கு சாதகமா? பாதகமா?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதால், தொழில் துறைக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இந்திய நிறுவனங்கள், வெளி சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றன. இதற்கு செலுத்தும் வட்டியில் தொடங்கி அனைத்தின் விலையும் அதிகரிக்கும் நிலை உருவாகும்.

டாலர் விலை அதிகரிப்பு – என்ன பாதிப்பு ?

இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கும். கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்கிறோம். இதற்கு டாலராக தான் பணம் செலுத்துவதால், இந்திய அரசு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக,
அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

டாலர் விலை அதிகரிப்பு – என்ன பலன் ?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலானவை பயன் பெரும்.

அமெரிக்க டாலரும், இந்தியாவில் வாழும் சாமானியனுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் ஒரு தோற்றம் இருக்கலாம். ஆனால், டாலரின் ஏற்படும் மாற்றம், நாம் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை, பல வகைகளில் மாற்றத்தை கொண்டு வரவல்லது.


68 responses to “அமெரிக்க டாலரும் இந்திய பொருளாதாரமும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *