பங்குச் சந்தையில் லாபமீட்ட ஒரு மாற்று வழி !

Alternate way of Investing

இந்திய பங்குச்` சந்தையில் இயங்கும் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டைப் பொறுத்தவரை தரமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் பார்க்கப்படுகிறது, அந்த நிறுவனப் பங்குகள், சிறப்பான சராசரி வருமான விகிதங்களின் (P/E Valuations) காரணமாக இந்தப் பங்குகள் பங்குச் சந்தையில் நல்ல விலைமதிப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில்லறை முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறி.

ஹிந்துஸ்தான் யூனிலீவரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதன் புகழ்பெற்ற பிராண்டுகளான டவ், லைஃபாய், கிஸ்ஸான் போன்றவை சிறப்பானவை, அது கடனில்லாத நிறுவனமும் கூட, இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் லாபகரமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கலாம், ஆனால், ஹோவர்ட் மார்க்ஸ் சொல்வதைப் போல “விலையை அடிப்படையாகக் கொண்டு எல்லா சொத்துக்களையும் நல்ல முதலீடு என்று சொல்லி விட முடியாது”.

எல்லாம் சரியாக இருந்தாலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் அதிக விலை காரணமாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தைக் கொடுப்பதில்லை, ஆகஸ்ட் 11 நிலவரப்படி, HUL -இன் P/E விகிதம் 68.55, அது வழங்கும் டிவிடெண்ட் 1.3 %. புகழ் பெற்ற ப்ராண்ட் மற்றும் எதிர்காலத்தில் லாபம் கொடுக்கும் என்பதால் பலர் அதில் முதலீடு செய்கிறார்கள். ஹிந்துதான் யூனிலீவர் பங்குகள் 2010-2021 கால இடைவெளியில் 14 % வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.

68.55 என்ற P/E விகிதம் என்பது நல்ல லாபமீட்டும் IT நிறுவனங்களுக்கு சமமான வளர்ச்சிதான். ஆனால், பல காரணங்களால் HUL இன் வளர்ச்சியை நாம் அப்படிப் பார்க்க முடியாது. பெரிய நிறுவனங்களில், லாபத்தைப் பங்கிடுவதில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக சில்லறை முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைகிறது.

இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள HUL மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் பிற இந்தியத் துணை நிறுவனங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், டிவிடென்ட் பே-அவுட் எனப்படும் லாபத்தின் மீதான பங்கீட்டு விகிதம் மிக அதிகமாக இருப்பது. தலைமை நிறுவனமான UNILEVER, HUL நிறுவனத்தின் 60% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நிலையில் Dividend Pay-Out இன் பங்கு மிக அதிகமாக இருக்கும், துணை நிறுவனமான HUL இடமிருந்து, தலைமை நிறுவனமான UNILEVER குறைந்த செலவோடு அதிக அளவு டிவிடெண்ட் பெற்றுக் கொள்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, அதிக டிவிடெண்ட் (Dividend Pay-Out) நல்ல P/E விகிதத்தின் விளைவைப் பாதிக்கிறது, HUL டிவிடெண்ட் தவிர தலைமை நிறுவனமான UNILEVER க்கு ‘ராயல்டி’ யும் கொடுக்க வேண்டும். இது சில்லறை முதலீட்டாளரின் லாபத்தில் கை வைத்து அவர்களது முதலீட்டை லாபமில்லாததாக மாற்றுகிறது, ராயல்டி மற்றும் டிவிடெண்ட் அதிக அளவில் தலைமை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுவதால் சில்லறை முதலீட்டாளர்களின் லாபம் குறைகிறது. நெஸ்லே, ப்ரொக்டெர் & கேம்பில் மற்றும் கோல்கேட்-பால்மோலிவ் போன்ற இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டுத் துணை நிறுவனங்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன.

சில்லறை முதலீட்டாளர்கள் லாபமீட்ட ஒரு நல்ல மாற்று வழி இருக்கிறது, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள HUL இன் தலைமை நிறுவனமான UNILEVER இல் சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். சில்லறை முதலீட்டாளர்கள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. நேரடியாகவோ, வேறு நிதி நிறுவனங்களின் மூலமாகவோ, தரகு நிறுவனங்களின் மூலமாகவோ சில்லறை முதலீட்டாளர்கள் வெளிநாட்டுப் பங்குகளை வாங்கலாம்.

UNILEVER இன் P/E விகிதம் 23.71, அது வழங்கும் டிவிடெண்ட் 3.53 %, மேலும், சில்லறை முதலீட்டாளர்கள் UNILEVER பங்குகளை வாங்கும் போது , HUL பெரும்பான்மைப் பங்குகளை அது வைத்திருப்பதன் காரணமாக வளர்ச்சியால் வரும் லாபத்தையும் கைப்பற்ற முடியும். HUL இன் 68.55 என்ற P/E விகிதம் மற்றும் 1.3% என்ற குறைந்த டிவிடெண்ட் வருமானத்தோடு ஒப்பிடும்போது, UNILEVER நிறுவனத்தின் 23.71 என்ற P/E விகிதமும், 3.53% டிவிடெண்ட் வருமானமும் ஒப்பீட்டு நோக்கில் சிறந்த வாய்ப்பு. இது ஹிந்துஸ்தான் யூனிலீவருக்கு மட்டுமல்ல, ஏனைய வெளிநாட்டு இந்தியத் துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதுமட்டுமல்ல, இந்திய ரூபாயின் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான வீழ்ச்சி காரணமாக, டாலரிலோ, பவுண்டிலோ முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டக் கூடியதாகவே இருக்கும், டாலரின் மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் (2011-2021) ஏறத்தாழ 60 % உயர்ந்திருக்கிறது, ஒருவேளை சில்லறை முதலீட்டாளர் வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளில் குறைந்த விலையுள்ள அதிக செயல்பாடற்ற (Low Cost – Passive) நிஃப்டி – இன்டெக்ஸ் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும் எஞ்சிய முதலீட்டை 50 பெரிய மூலதன நிறுவனங்களிலும் செய்து லாபமீட்டலாம், நேரடியாக தலைமை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது அதிக லாபமளிக்கும்.

கட்டுரையாளர்கள் : ஆனந்த் ஸ்ரீனிவாசன் / சாஸ்வத் ஸ்வாமிநாதன்

Credits : The Hindu


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *