பருவமழையும் பணவீக்கமும்!


“இந்தியாவின் நிலையற்ற மற்றும் இயல்பைவிட குறைவான பருவமழை, பணவீக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு சவால்களை உருவாக்கக்கூடும்.” என்று பார்க்லேஸ் பிஎல்சியின் இந்தியத் தலைமைப் பொருளாதார நிபுணர் கணிப்பு.

“பருவமழைப் பொழிவு இயல்பை விட 8% குறைந்திருக்கிறது, இது எதிர்வரும் விதைப்பு மற்றும் அறுவடைக்காலங்களை பாதிக்கும், இதன் அழுத்தமானது நுகர்பொருட்களின் விலை மீது எதிரொலித்து விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும்” என்று ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ராகுல் பஜோரியா கூறி இருக்கிறார்,

“இதன் தாக்கம் நடுத்தர கால அளவிலான விளைவுகளை உருவாக்கலாம், அரசு இப்போதே முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயம் சார்ந்திருக்கும் ஊரகப் பகுதி மக்களுக்கான வருமானத்தை உறுதி செய்யவேண்டியது அவசியம்” என்று மேலும் கூறுகிறார் பஜோரியா.

பணவீக்கமானது மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்த 2% – 6% இலக்கு வரம்பை தகர்த்து சென்று சற்று சரிவடைந்துள்ளது, அதே நேரத்தில் தொற்றுநோயிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மத்திய வங்கி தனது நீண்டகால நிலைப்பாட்டை பராமரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, மார்ச், 2022 வரையிலான நிதியாண்டில் பணவீக்கத்தை 5.7% ஆகக் கணிக்கிறது, மேலும், தற்போதைய பணவீக்க அதிகரிப்பை தற்காலிகமானது என்றே கருதுகிறது.

“பருவமழைப் பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க, அரசு ரேஷன் மற்றும் பணப்பரிமாற்றம் போன்ற நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், அரசு ஒரு புவிசார் நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்க வேண்டியிருக்கலாம், எந்த வகையான பயிர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன என்பதைக் கவனித்து அதற்கேற்ற வகையிலான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்கிறார் பஜோரியா. உதாரணமாக, பருத்தி அறுவடை குறைவதன் காரணமாக ஜவுளித்துறை பணவீக்கம் ஏற்படக்கூடும்.

இந்திய ரிசர்வ் வங்கி, இயல்பு நிலையை நோக்கி படிப்படியாக முன்னேறிக்கொண்டிருக்கிறது, பாதுகாப்பான வளர்ச்சி குறித்த பார்வை அதற்கான தேவையாக இருக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கி அதன் கொள்கை வகுப்பு நிலைப்பாட்டில் உயரும் பணவீக்கத்தை ஒரு காரணியாக கொண்டுள்ளது, ஆனால் இயல்பை நோக்கித் திரும்புவதைத் தூண்டுவது மட்டுமே போதுமானதில்லை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணவீக்கம் உயர்ந்திருப்பதால், வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புகளில், நிலையற்ற தன்மை குறைந்துவிட்டதா, இல்லையா? என்பதைக் கவனிக்க முயற்சிப்பது தான் முன்னுரிமையாக இருக்கும்,” என்கிறார் அவர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *