ஒருங்கிணையும் ஸ்ரீராம் நிறுவனங்கள், அறிமுகமாகிறது சூப்பர் ஆப் !


வங்கிசாரா நிதிக் குழுமமான ஶ்ரீராம் நிறுவனம், தனது நிதிச் சேவைகளை வழங்கும் பட்டியலிடப்படாத ஶ்ரீராம் கேப்பிட்டல் லிமிடெட், ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து நாட்டின் மிகப்பெரிய சில்லறை வங்கிசாரா நிறுவனத்தை உருவாக்க உள்ளது என்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக குழுமத்தில் பட்டியல் இடப்படாத முதலீட்டு நிறுவனமான பிரமல் குழுமமும், அமெரிக்காவின் தனியார் பங்கு நிறுவனமான டிபிஜி கேப்பிடல் நிறுவனமும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஐடிஎஃப்சி வங்கியுடன் இணைவதற்கான முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இரு முதலீட்டாளர்களும் கடந்த சில ஆண்டுகளாக வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஶ்ரீராம் கேப்பிட்டலில் 2014 ஆம் ஆண்டில் 20 சதவீத பங்குகளை 2,014 கோடி ரூபாய்க்கு பிரமல் வாங்கினார். ஶ்ரீராம் சிட்டி யூனியனில் 10 சதவீத பங்குகளையும் அவர் வைத்திருக்கிறார்.

ஶ்ரீராம் நிறுவனத்தின் இந்த நிதியாண்டில் 4,900 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது. செப்டம்பர் 30ந் தேதி நிலவரப்படி நிர்வாகத்தின் சொத்து மதிப்பு ₹2 ட்ரில்லியனுக்கு மேல் உள்ளது. காப்பீடு, தரகு மற்றும் சொத்து மேலாண்மை வணிகங்கள், அவற்றின் முதலீட்டாளர்கள் உட்பட ஒரு விரிவான திட்டத்தை ஸ்ரீராம் குழுமம் உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கீழ் தற்போதுள்ள மற்றும் புதிய கடன் வழங்கும் அனைத்து தயாரிப்புகளும் கிடைக்கும் சூப்பர்-ஆப்பை விரைவில் அறிமுகப்படுத்த நிறுவனம் விரும்புகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கிளிக்கில் ஸ்ரீராமை அணுக உதவும், தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கப்பட்ட நிறுவனத்தில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான உமேஷ் ரேவங்கரும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சக்கரவர்த்தியும் இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமின் நிதி ஆலோசகர்களாக மோர்கன் ஸ்டான்லியும், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸூம் செயல்படுகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *