‘AT1’ பாண்டுகள் மூலம் ₹4000 கோடி நிதி திரட்டிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, முதிர்வு தேதியற்ற கூடுதல் முதல் அடுக்கு (பெர்பட்சுவல் AT1) பத்திரங்களின் மூலமாக ₹4,000 கோடி திரட்டி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த வெளியீடு சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், இதற்கான ஆண்டு வட்டி விகிதம் (கூப்பன்) 7.72% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. .

செபியின் புதிய கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பிறகு உள்நாட்டு சந்தையில் எஸ்பிஐ-யின் முதல் பத்திர வெளியீடு இது. அடிப்படை பத்திர விலை ₹1000 கோடியாக இருந்த நிலையில்,  இந்த வெளியீடு முதலீட்டாளர்களிடமிருந்து பேராதரவை பெற்று ₹10,000 கோடிக்கு மேலான கேட்புக்குள்ளானது. கேட்புகளின் அடிப்படையில், 7.72% வட்டி விகிதத்தில் ₹4000 கோடியை ஏற்க வங்கி முடிவு செய்தது. 2013 இல் பாசெல்-3 மூலதன விதிகளை அமல்படுத்திய பிறகு எந்தவொரு இந்திய வங்கியும் வழங்கிய பத்திரங்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.

வரும் மாதங்களில் முதிர்ச்சியடையும் AT1 பத்திரங்களுக்கு (சுமார் 7000 முதல் 8000 கோடி வரை) திருப்பி செலுத்தும் வகையில் மூலதனம் திரட்டுவதற்க்காக இந்த வெளியீடு செய்யப்படுவதாக எஸ்பிஐ நிர்வாகிகள் தெரிவித்தனர். மீத தொகையை திரட்டுவது பற்றி, சந்தை நிலவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

AT1 பத்திரங்கள் முதிர்வு தேதியற்றவை,  தவிர,  வழங்குபவரால் ஐந்து வருடங்கள் அல்லது அதற்குப் பிறகு எந்த ஆண்டுவிழா தேதியிலும் திரும்ப பெறப்படலாம்.

எஸ்பிஐ உள்நாட்டில் பத்திர வெளியிடல் மூலம் நிதி திரட்டிய நிலையில்,  ஆக்ஸிஸ் வங்கி அமெரிக்க டாலர் மதிப்பில் 60 கோடியை 4.1 சதவிகிதத்திலும், ஹெச்டிஎஃப்சி வங்கி அமெரிக்க டாலர் மதிப்பில் 100 கோடியை 3.7 சதவிகிதத்திலும் திரட்டியுள்ளன. இதில் வட்டியும் பத்திரங்களை திரும்ப பெறும்போது அசல் தொகையும் டாலர் தொகையிலேயே செலுத்தப்படவேண்டும். டாலருக்கு எதிரான ரூபாயின் ஏற்ற இறக்கம் இதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *