ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!


நஷ்டத்தில் உள்ள ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த விமானசேவை நிறுவனமாக மாற்றுவோம் என டாடா சன்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

நஷ்டத்தில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம்:

2007-2008-ல், AISATS நிறுவனம், ஏர்லைன்சுடன் இணைந்ததில் இருந்து ஏர்இந்தியா நிறுவனம் ஒருமுறையும் லாம் பெற்றதில்லை. 2021-ம் நிதியாண்டில் ஏர்இந்தியா, 7,017 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில், 69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில், நஷ்டத்தில் உள்ள ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த விமானசேவை வழங்கும் நிறுவனமாக மாற்றுவோம் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.  

புதிய குழுவின் அமைப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏர்இந்தியா விமான நிறுவனத்தில் தற்போதுள்ள இயக்குநர்கள், நிதி, வணிகம், செயல்பாடுகள் மற்றும் மனிதவளத்துறைக்கு பொறுப்பு ஏற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா குழுமம் திட்டம்:

டாடா குழுமம், முழு சேவை மற்றும் குறைந்த விலை பிரிவுகளில் செயல்பட திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவை இணைந்து குறைந்த கட்டண விமான சேவையை உருவாக்கும் அதே வேளையில், ஏர் இந்தியா விஸ்தாராவுடன் இணைக்கப்படும்.

வருமானம் மற்றும் செலவை மேம்படுத்தும் டாடாவின் திட்டமிட்ட உத்தியை செயல்படுத்தினால், ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   உணவு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு   தவிர, வருவாய் மேலாண்மை, துணை வருவாய் மற்றும் சரக்கு செயல்பாடுகள் போன்ற வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று டாடா குழுமம் கூறியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *